தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரை போட்டி.

நானும் சீன வானொலியும் :
சீன வானொலி தமிழ்
பிரிவின் பொன்விழா (50 ஆம் ஆண்டு) ஆண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் எனக்கும் சீன வானொலித்
தமிழ் பிரிவிற்கும் உள்ள உள்ளார்ந்த உறவு மற்றும் இதன் மூலம் நான் அடைந்த உள்ள மகிழ்வு,
அதன் மூலம் விரிவடைந்த எனது நட்பு வட்டம், இதன் பயன் விளைவாய் எனக்கு கிட்டிய உலகலாவிய தொடர்பு
ஆகியவற்றை இந்த நல்ல நேரத்தில் மலரும் நினைவுகளாய் அசை போட்டு உங்களோடு பகிர்ந்துக்கொள்வதில்
மட்டற்ற மகிழ்வெய்துகிறேன்.
ஆம், சீன வானொலித்
தமிழ் பிரிவோடு நான் கொண்ட உறவு என்பது சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறித்து
வைக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றால் அது மிகை ஆகாது.
நான் பள்ளிக் கல்வி
பயிலும் போதே வானொலின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவன், ஆம் தேர்வுக்கு படிக்கும் போது
கூட வானொலிப் பெட்டியை அருகில் வைத்துக்கொண்டு அதில் ஏதேனும் ஓர் நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டே
படிப்பேன். அதன் விளைவு உலகின் பல்வேறு வானொலி நிகழ்ச்சிகளையும் தேடுவதில் நாட்டம்
ஏற்பட்டது.
1985ஆம் ஆண்டு ஜூலைத்
திங்களின் ஓர்நாள் இரவு 7.45 மணிக்கு எனது வானொலிப் பெட்டியில் சிற்றலை வரிசையில் வழக்கமான
தேடுதல் நிகழ்த்திக்கொண்டு இருந்தேன். சிற்றலை 31 மீட்டர் அருகில் சென்றபோது சட்டென
நிறுத்தினேன். ஓர் இனமறியா மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது,
ஆம், மழலை மொழியில்,
கொஞ்சு தமிழில் ஓர் குரல் ஒலித்தது. பற்றினேன் அக்குரலை, நினைவில் நிறுத்தினேன் அந்த
அலை வரிசையை. அன்று நான் எள்ளளவும் நினைக்கவில்லை எதிர்பாரா இந்நிகழ்வு எனது வாழ்வில்
இந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று.
அன்று முதல் இன்று
வரையில் தமிழ் ஒலிபரப்பை தொடர்ந்து கேட்டு வருகிறேன். வழியில்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள்.
1986 ஆம் ஆண்டு இரு தமிழ் நேயர்கள் திருவாளர்கள் இராசிபுரம் ஒய்.எஸ்.பாலு, பெருந்துறை
பல்லவி கே. பரமசிவன் ஆகியோர் சீனப் பெருஞ்சுவர் மீதிருந்து பேசுகிறோம் எனக் கூறி அவர்களின்
குரலொலி வானொலியில் கேட்டது மறக்க முடியாதது.
சீன வானொலி தமிழ்
நேயர்களின் அகில இந்தியக் கருத்தரங்குகள் இதுவரையில் 24 நடபெற்று உள்ளது. அதில் 4 கருத்தரங்குகளைத்
தவிர்த்து மீதம் உள்ள 20 கருத்தரங்குகளில் நான் பங்கு பெற்றதில் பெருமை அடைகிறேன்.
முதன் முதலில் இலவச
சீனப் பயணம் மேற்கொண்ட தமிழ் நேயர்களான திரு ஒய்.எஸ். பாலு அவர்களும், திரு பல்லவி
கே. பரமசிவன் அவர்களும் தாயகம் திரும்பிய பின் அகில இந்தி சீன வானொலி நேயர்கள் மன்றம்
என்ற பெயரில் ஓர் அமைப்பைத் துவக்கினர். அதன் முதல் கருத்தரங்கு 1986 ல் பெருந்துறையில்
நடத்தினர். அதில் நான் கலந்துக்கொள்ள இயலா நிலையில் அடுத்து 09.08.1987 ல் இராசிபுரத்தில்

இராசிபுரத்தில் நடைபெற்ற கருத்தரங்கு
இரண்டாவது கருத்தரங்கு நடைபெற்றது. அதில்
நான் கலந்துக்கொண்டேன். அக்கருத்தரங்கில் சிறப்பு
விருந்தினராகக் கலந்துக்கொண்ட அப்போதைய சிறப்பு நிபுணர் திருவாளர் முனைவர் நா. கடிகாசலம்
அவர்கள் நேயர்களுடன் பல செய்திகளைப் பகிர்ந்துக்கொண்டார். அந்த நேரத்தில் அவர் என்னிடம்
உமது பெயரின் பின்னால் D.T.ed எனப் போடுகிறீர்களே அதன் பொருள் என்ன? எனக் கேட்டபோது
நான் உண்மையிலேயே வியந்து போனேன், ஆம் நான் வானொலிக்கு கடிதம் எழுதும் போது எனது முகவரி
பகுதியில் பெயருக்கு பின்னால் அவ்வாறு குறிப்பிடுவது வழக்கம். நான் எழுதும் கடிதத்தை
எவ்வளவு கவனத்தோடு இவர் கையாண்டிருந்தால் இவ்வளவு
நினைவாற்றலோடு இதைக் கேட்டிருக்க இயலும்.
இது
போன்ற நிகழ்வுகள் எல்லாம் என்னை மேலும் கவர நான் தொடர்ந்து சீன வானொலியைக் கேட்டு கடிதம்
எழுதிக்கொண்டிருந்தேன். ஒவ்வோர் கடிதத்திற்கும் பதில் கடிதம் வானொலியினிடமிருந்து வரும்
போது அவற்றை பொக்கிஷமாக கருதும் நிலை ஏற்பட்டது.
ஊத்தங்கரை மன்றத் துவக்கம் :
என்னுள்
ஏற்பட்ட இந்தத் தாக்கம் எனது நண்பர்கள் பலரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்
கடந்த 23.10.1987 ல் எமது ஊரில் ஊத்தங்கரை SKY பீகிங் வானொலி நேயர் மன்றம் என்ற பெயரில்
ஓர் அமைப்பைத் துவக்கினேன்.
மன்றத்
துவக்கமே அமர்க்களம்தான் ஆம், வானொலி நேயர் மன்ற வரலாற்றிலேயே அன்று முதல் இன்று வரையில்
அகில இந்தியத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூவரையும் அழைத்து மன்றம் துவக்கியது
எமது மன்றமாக மட்டுமே இருக்க முடியும் என நம்புகிறேன். அன்றைய துவக்க விழாவில் அன்றைய
அகில இந்திய பீகிங் வானொலி நேயர் மன்றத் தலைவர் திரு ஒய்.எஸ். சைனா பாலு, செயலாளர்
பல்லவி. கே. பரமசிவன், பொருளாளர் கோவை ராம்நகர் ஆர். சின்னராஜ் ஆகியோரும் பல்வேறு ஊர்களில்
இருந்தும் பல நேயர்கள் வந்து மன்றத் துவக்க விழாவில் பங்கேற்றனர். அன்றைய தினம் உங்கள்
குரல் நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டு வானொலிக்கு அனுப்பப்பட்டு அவை ஒலிபரப்பும் செய்யப்பட்டது.
மாவட்ட மன்றத் துவக்க விழா :

கருத்தரங்கில் கலந்துக்கொள்ள வந்துள்ள அனைவரையும்
வரவேற்கும் நான்
அடுத்து நேயர் மன்ற நிகழ்வுகள் மாவட்டம் முழுமையும்
பரவச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட
மன்றம் துவக்கிடும் எண்ணம் ஏற்பட்டதன் விளைவு 30.10.1988 ல் எமது ஊத்தங்கரை பீகிங்
வானொலி நேயர் மன்ற ஆண்டு விழாவும் தருமபுரி மாவட்ட பீகிங் வானொலி நேயர் மன்ற துவக்க
விழாக் கருத்தரங்கமும் நடைபெற்றது.
இதில்
அன்றைய பீகிங் வானொலி தமிழ் பிரிவு சிறப்பு நிபுணர் திருவாளர் முனைவர் நா. கடிகாசலம்
அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார். மேலும் அகில இந்திய நேயர் மன்றப்
பொருப்பாளர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் இன்றைய, அன்றைய முன்னணி நேயர்கள் அனைவரும் பங்கு
பெற்றனர்.
இதில்
மரியாதைக்குறிய நண்பர் முனைவர் நா. கடிகாசலம்
அவர்கள் விழாவில் கலந்துக்கொள்ள சென்னையிலிருந்து இரவு பேருந்தில் பயணம் செய்து விடியற்காலை
4.30 மணிக்கு எமது இல்லத்தை அவரே தேடி வந்து கதவைத் தட்டியது இன்றும் மனதில் நிழலாடுகிறது.
ஓர் சாதாரன நேயருக்கு அவர் அளித்த மரியாதை இன்றும் வியக்க வைக்கிறது.

தருமபுரி
மாவட்ட பீகிங் வானொலி நேயர் மன்றத் துவக்க விழா கருத்தரங்கில் முனைவர் நா. கடிகாசலம்,
ஒய்.எஸ்.பாலு, பல்லவி கே.பரமசிவன்

கருத்தரங்கில்
உரையாற்றும் முனைவர் நா. கடிகாசலம் அவர்கள்

கருத்தரங்கில் கலந்துக்கொண்ட நேயர்களுடன்
சிறப்பு விருந்தினர்கள்
சீன வானொலித் தமிழ்
பிரிவோடு தொடர்பு கொண்ட நான் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு கடிதம் எழுதுவதும் அதற்கு
பிரதி பலனாக வண்ண அட்டைகளையும், பரிசுப் பொருட்களையும் பெறுவது மட்டுமே நோக்கம் என்பதாக
செயல்பட விரும்பாமையால் இந்நேயர் மன்றம் மூலம் வேறு பல ஆக்கப் பூர்வ செயல்பாடுகளில்
பங்கேற்க விரும்பினேன். அதன் முதல் படி இந்திய சீன நட்புறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது. இத் தருனத்தில்தான் அன்றைய
இந்தியத் தலைமை அமைச்சர் மாண்புமிகு இராஜீவ் கந்தி அவர்கள் சீனப்பயணம் மேற்கொள்வதாக
இருந்தது, அப்போது எமது தருமபுரி மாவட்ட பீகிங் வானொலி நேயர் மன்ற முகப்புக் கடிதம்
மூலம் (LETTER PAD) கீழ்க் கண்ட வாசகங்கள்
அடங்கிய வாழ்த்துக் கடிதம் மாண்புமிகு இந்திய தலைமை அமைச்சர் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.
அதன் சுருக்கம் இதோ…..
அன்பிற்கினிய பாரதப் பிரதமர்
அவர்களுக்கு வணக்கம்,
வரும் 19.12.1988 முதல் தாங்கள் மேற்கொள்ள உள்ள சீனப் பயணம் வெற்றி
பெற எமது நல் வாழ்த்துக்கள். 1954 ல் பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் சீனப் பயணம் மேற்கொண்டதற்குப்
பின்னால் கடந்த 34 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் சீனப் பயணம் மேற்கொள்வது தாங்கள்
ஒருவரே. இது வரவேற்கத்தக்க ஒன்று. இதன் மூலம் இந்திய சீன நட்புறவு வலுவடையும் என நம்புகிறேன்.
தற்போது உள்ள சில சிறிய பிரச்சனைகளும் சமாதான முறையில் தீர்க்கப்படும் என எதிர் நோக்கி
தங்கள் சீனப் பயணம் வெற்றியடைய எமது மாவட்ட மன்றம் மூலம் வாழ்த்துகிறோம்.
மேலும் எமது மன்றம்
மூலம் பள்ளி மாணவர்களுக்கு பற்பல இலக்கிய போட்டி நிகழ்ச்சிகளையும் பொது மக்களுக்கான
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்திட முடிவாற்றி அதன்படி பல நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
அகில இந்திய பீகிங்
வானொலி நேயர் மன்ற பொருப்பாளர்கள் இருவர் கருத்தரங்கு நடத்திய பின் மூன்றாமவர் நடத்த
வேண்டாமா? அந்த மூன்றாவது கருத்தரங்கு இந்திய – சீன நட்புறவுக் கழக துவக்க விழா உள்ளிட்ட
முப்பெரும் விழாவாக 25.12.1988 ல் கோவையில் நடைபெற்றது.
அதில் தமிழ் பிரிவில்
அப்போது பணியாற்றாவிட்டாலும் கூட நேயர்களின் மீது கொண்ட அன்பின் காரணமாய் முனைவர் நா.
கடிகாசலம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார்.
இந்த நேரத்தில்
கோவை ராம்நகர் ஆர் சின்னராஜ் அவர்களைப் பற்றிய சில செய்திகளையும் பதிவு செய்திட விரும்புகிறேன்.
சீன வானொலி தமிழ் நிகழ்ச்சிகளில் அப்போது சீனக்கதைகள் நிகழ்ச்சியில் திரு நா. கடிகாசலம் அவர்கள் மொழி பெயர்த்து வழங்கிய அவந்திக் கதைகள்
இடம்பெற்று வந்தது. இதற்கு நேயர்கள் இடையே மிகுந்த வரவேற்பு இருந்தது. அப்போது ஆர்.
சின்னராஜ் அவர்கள் ஓர் கடிதம் மூலம் அவந்திக் கதைகளை ஏன் அச்சிட்ட புத்தகமாக வெளியிடக்
கூடாது? என வினவினார். அதன் வெளிப்பாடுதான் ”மந்திரப் பறவை” எனும் நூல். இது நேயர்களின்
கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் சீன வானொலித் தமிழ் பிரிவின் மனப்பான்மையைக் காட்டுகிறது
ஊத்தங்கரையில் அகில இந்திய பீகிங் வானொலி
நேயர் மன்றக் கருத்தரங்கு :

அகில
இந்திய பீகிங் வானொலி நேயர் மன்ற 4 வது கருத்தரங்க நிகழ்வில் பேசுபவர் அன்றைய தருமபுரி
மாவட்டத் தலைவர் அக்கமனஅள்ளி டி. சுந்தரம் உடன் முனைவர் நா. கடிகாசலம், பல்லவி கே.பரமசிவன்,
ஒய்.எஸ். சைனா பாலு மற்றும் நான்
மூன்று கருத்தரங்குகளை
நடத்திவிட்ட பின்னர் 4 வது கருத்தரங்கு எங்கு நடத்துவது என வினா எழுந்த போது அதை தனதாக்கிக்கொண்ட
நான் ஊத்தங்கரையிலேயே அகில இந்திய பீகிங் வானொலி நேயர் மன்றக் கருத்தரங்கை நடத்துவதாக
அறிவித்தேன்.
அதன்படி கடந்த
26.11.1989 ல் ஊத்தங்கரை மன்ற ஆண்டு விழாவும் அகில இந்திய பீகிங் வானொலி நேயர் மன்ற
4 வது கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் மரியாதைக்குறிய நண்பர் முனைவர் நா. கடிகாசலம்
அவர்கள் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியில் இருந்த போதும் கூட ஊத்தங்கரை
விழாவிற்கு வந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார்.

கருத்தரங்கில்
எழுத்தாளர் த. உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம்
இங்கு நடைபெற்ற
கருத்தரங்க நிகழ்வு நேயர் மன்ற கருத்தரங்க வரலாற்றில் தனி முத்திரையையும், சீன வானொலி தமிழ் பிரிவு வழங்கும் நிகழ்ச்சிகளில்
பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகை அல்ல.
ஆம்,
இக்கருத்தரங்கு நேயர்களின் வெறும் கூடல் மற்றும் கருத்துப் பரிமாற்றத்தோடு மட்டும் நிகழ்த்தப்படவில்லை. அதையும் கடந்து நேயர்களின்
சிந்தனைகளுக்கு விருந்தளிக்கும் வகையில் “மக்களுக்கு அதிகம் பயன் தருவது வானொலியா?
செய்தித்தாளா?” என்ற தலைப்பில் எழுத்தாளர் மேல்பட்டி த. உதயகுமார் அவர்கள் தலைமையில்
பட்டி மன்றமும், “மங்காப் புகழ் பீகிங் வானொலி” என்ற தலைப்பில் கவிமாமணி வெற்றிப்பேரொளி
அவர்கள் தலைமையில் கவியரங்கமும் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில்
இருந்து வந்திருந்த நமது நேயர்களே பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்தரங்கில்
கவிமாமணி வெற்றிப்பேரொளி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம்
மேலும்
இக்கருத்தரங்கில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு அனைத்தும் பதிவு செய்யப்பட்டு சீன
வானொலி தமிழ் பிரிவிற்கு அனுப்பி ஒலிபரப்பச் செய்ததில் புதிய புரட்சியே நடந்தது எனலாம்.

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை
வி.டி. இரவிச்சந்திரன்
சீன வானொலியில் நேயர்களின் குரல் ஒலித்தால்
அது உங்கள் குரல் நிகழ்ச்சி மட்டுமே என இருந்த அன்றைய காலகட்டத்தில் அன்றாடச் செய்திகளுக்குப்
பின் முழுமையாக ”சிறப்பு நிகழ்ச்சி” என்ற பெயரில் நேயர்களால் தயாரித்து வழங்கப்பட்ட
முதல் நிகழ்ச்சி எமது இக்கருத்தரங்க நிகழ்ச்சிதான் என்பதில் இன்றளவும் பெருமை அடைகிறேன்.
இதற்கு
காரணமாக அமைந்தவர் அன்றைய தமிழ் பிரிவுத் தலைவர் திரு பேராசிரியர் எஸ்.சுந்தரன் அவர்கள்.
தமிழ் பிரிவு வரலாற்றில் அவருக்கான இடம் எப்போதும் நிரந்தரமானது, அதை இன்றளவும் வேறு
எவராளும் கைப்பற்ற முடியவில்லை.
ஐம்பெரும் விழா :
ஒவ்வோராண்டும் எமது
மன்ற ஆண்டு விழா நடத்தப்பட வேண்டுமென்ற அவாவின் அடிப்படையில் அடுத்த ஆண்டு நிகழ்வாக
நடத்தப்பட்ட விழா ஐம்பெரு விழா.
ஆம்,
கடந்த 23.12.1990 ல் எமது மன்றத்தின் 4 ஆம் ஆண்டு விழா, தருமபுரி மாவட்ட பீகிங் வானொலி
நேயர் மன்ற 2 வது மாவட்டக் கருத்தரங்கு, பாரதிதாசன் நூற்றாண்டு விழா, தகடூர் (தருமபுரி)
மாவட்ட வெள்ளி விழா, சுற்றுச் சூழல் பாதுகாப்பு நாள் விழா ஆகியவை இணைந்த ஐம்பெரும் விழா நடத்தப்பட்டது
உவமைக் கவிஞர் சுரதா
அவர்களின் தலைமையில் நடைபெறுவதாக இருந்த இவ்விழா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர்
வர இயலாச் சூழலில் தமிழ் சிற்றிதழ்கள் சங்க மாநிலத் தலைவர் திரு குன்றம் மு. இராமரத்தினம்
அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
.

தலைமை உரை ஆற்றும் குன்றம் மு. இராமரத்தினம்
அவர்கள்

பீகிங்
வானொலி கருத்தரங்கு தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துக்கொள்கிறார் முனைவர் நா. கடிகாசலம்
அவர்கள்.
விழாவில் மாவட்ட
பீகிங் வானொலி நேயர் மன்ற கருத்தரங்க கருத்துக்களையும், சீன வானொலி நிகழ்ச்சிகள் குறித்த
விபரங்களையும் முனைவர் நா. கடிகாசலம் அவர்கள் சிறப்புடன் வழங்கினார்.
அடுத்து தகடூர் (தருமபுரி) மாவட்ட வெள்ளி விழா தொடர்பான
கருத்துக்களை வழங்கிய பேராசிரியர் மு.வை அரவிந்தன் அவர்கள் தருமபுரி மாவட்டத்தின் வரலாற்றுத்
தகவல்களை வழங்கினார். அதில் இந்தியாவிலேயே கரும்பு விளைவித்த முதல் இடமும், இரும்பை
பயன்படுத்திய முதல் இடமும் தருமபுரிதான் என்ற அரிய தகவல் கிடைத்தது.

அடுத்து பாரதிதாசன்
நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்வில் ”புரட்சிக் கவிஞரின் புனித பாதையில்” என்ற தலைப்பில் முனைவர் நன்னியூர் நாவரசன் அவர்கள்
தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிமாமணி வெற்றிப்பேரொளி உள்ளிட்ட ஏழு புகழ்பெற்ற
கவிஞர்கள் பங்கு பெற்றனர்
இந்த
நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பாக இந்னிகழ்வை சிறப்பாக்கும் வகையில் அதியன் மண்ணில் அருந்தமிழ்,
புதுவைக் குயிலின் புரட்சி காணம், தகடூரின் தனிப் பெருமை ஆகிய தலைப்புகளில் கவிதைப்
போட்டியும், அண்டை நாட்டில் அருந்தமிழ், புரட்சிக் கவிஞர் கண்ட புது உலகம் ஆகிய தலைப்புகளில்
கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டது. அதற்கான பரிசுகள் விழாவில் வழங்கப்பட்டது.
சிறந்த
நேயர் விருது :
சீன
வானொலி நேயர் மன்றத்துடனான எனது தொடர்புகள் மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை சிறப்பிக்கும்
வகையில் சீன வானொலியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட சிறந்த நேயர் என்ற விருது எனக்கு
10.11.1991 ல் ஈரோட்டில் நடைபெற்ற 6 ஆவது அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றக் கருத்தரங்கில்
வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் தமிழ் பிரிவுத் தலைவர் திரு பேராசிரியர் எஸ். சுந்தரன்
அவர்களும், தெற்காசிய துறைத் தலைவர் திரு பேராசிரியர்
வங் பௌ சி அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
எனது
இல்லத்தில் தமிழ் பிரிவுத் தலைவர் :

எனது குடும்பத்தினரோடு
தமிழ் பிரிவுத் தலைவர் மற்றும் தெற்காசிய துறைத் தலைவர்
ஈரோடு
கருத்தரங்கிற்கு வரும் தமிழ் பிரிவுத் தலைவர் திரு எஸ்.சுந்தரன் அவர்கள் தமிழகப் பயணத்தின்
போது எமது இல்லத்திற்கு அவசியம் வரவேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்னதாக வைத்திருந்த
காரணத்தால் கருத்தரங்கு முடித்து ஒரு நாள் ஓய்வுக்குப் பின்னர் தமிழ் பிரிவுத் தலைவர்
திரு எஸ். சுந்தரன் அவர்களும், தெற்காசியத் துறைத் தலைவர் திரு வங் பௌ சி அவர்களும்
12.11.1991 அன்று எனது இல்லத்திற்கு நண்பர் பல்லவி கே. பரமசிவன் அவர்களோடு வந்தனர்.

ஊத்தங்கரை நண்பர்களோடு வயல்வெளியில்
இரண்டு
நாட்கள் எனது இல்லத்தில் தங்கி இருந்த அவர்கள் இங்குள்ள பல நேயர்களையும் சந்தித்தனர்.
மேலும் அருகில் இருந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று இயற்கை சூழலுடன் அவர்களை ஒன்றினைக்கச்
செய்தமை மகிழ்வளித்தது.
வயல்வெளியில் அமர்ந்து
நேயர்களோடு அவர்கள் சேர்ந்து இளநீர் அருந்திய அந்த எளிமை இன்னும் எனக்கும் எமது மன்ற
நேயர்களுக்கும் மறக்கவில்லை.



ஓய்வறையில்
நேயர்களோடு

சென்னை எம்.ஜி.ஆர் சமாதியின் முன்பு
திருமண வாழ்த்து :
கடந்த
06.09.1992 ல் எனக்கு திருமணம் நடைபெற்றது இது குறித்த அழைப்பிதழை நான் தமிழ் பிரிவுத்
தலைவர் திரு எஸ். சுந்தரன் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அதைப் பெற்றுக்கொண்ட அவர்
எனது திருமணத்திற்கான வாழ்த்தை திருமண நாளான 06.09.1992 அன்று இரவு நிகழ்ச்சியிலேயே
வழங்கி சிறப்பு செய்தார். சீன வானொலியில் ஓர் நேயருக்கு திருமண வாழ்த்து தெரிவித்த
முதல் நிகழ்வு இதுதான். அதே நேரத்தில் தமிழ் பிரிவு நேயர்களுக்கு அளிக்கும் மரியாதையாகவும்
இதைக் கருதலாம்.
தமிழ் பிரிவின் 30 ஆம் ஆண்டு விழா :
எமது
மன்றம் சார்பில் நடைபெறும் நிகழ்சிகளில் பல வேறுபட்ட , பயன்மிக்க செயற்பாடுகளை உட்புகுதுவது
வழக்கம். அவ்வகையில் 15.08.1993 ல் நடபெற்றது. ஐம்பெரு விழா.

ஆம்
இந்திய சுதந்திர தின விழா, சீன வானொலித் தமிழ் பிரிவிம் 30 ம் ஆண்டு விழா, ஊத்தங்கரை
மன்ற 7 ஆம் ஆண்டு துவக்க விழா, சீன வானொலி பரிசுப் பொருள் கண்காட்சி, மாணவர்களுக்கு
பரிசளிப்பு விழா உள்ளிட்ட ஐம்பெரு விழா நடத்தப்பட்டது.

விழாவில்
ஒய்.எஸ். சைனா பாலு, அரசு ஆண்கள் மேநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கே. சுப்பராயன்,
தமிழாசிரியர் இரா. குருநாதன், தர்மபுரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்க பொதுச்
செயலாளர் தணிகை ஜி. கருணாநிதி, மருத்துவர் மேஜர் கே. கமலநாதன், உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர் மா. அரங்கநாதன் ஆகியோர் பங்கு பெற்றனர்.

சீன வானொலி பரிசுப் பொருள்
கண்காட்சி
30 அடி நீளக் கடிதம் :
தமிழ் பிரிவின் 30 ஆம் ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும்
வகையில் 1993 ஆம் ஆண்டு நான் தமிழ் பிரிவிற்கு 30 அடி நீளமுள்ள ஓர் நேயர் கடிதத்தை
அனுப்பி வைத்தேன். அதைக்கண்ட தமிழ் பிரிவுத் தலைவர் அவர்கள் மிகவும் மகிழ்ந்து வாழ்த்து
தெரிவித்து கடிதம் எழுதினார்.
08.01.1995 ல் பழனியில் அகில இந்திய சீன வானொலி நேயர் மன்ற 9 வது கருத்தரங்கு நடைபெற்றது. அதில் அன்றைய தமிழ்
பிரிவுத் தலைவர் திரு எஸ். சுந்தரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார்.
எனவே இக்கருத்தரங்கில் எனது மனைவி திருமதி ஈ. அகிலாண்டேஸ்வரி மற்றும் எனது இரண்டு வயது
குழந்தை அ.இரா. பொன்னரசி ஆகியோருடன் கலந்துக்கொண்டேன்.

பழனியில்
நடபெற்ற கருத்தரங்கில் சிறப்பு வினா- விடைப் போட்டிக்கான முதல் பரிசை தமிழ் பிரிவுத்
தலைவர் அவர்களிடமிருந்து பெறல்
இக்கருத்தரங்கில் அகில இந்திய சீன வானொலி
நேயர் மன்றத்திற்கான நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டு தமிழ்
பிரிவுத் தலைவர் திரு எஸ். சுந்தரன் அவர்கள் அறிவித்தார். அதில் நானும் ஒருவன் என்பதிலே
மகிழ்வெய்தினேன்.
அதன்
அடிப்படையில் சீன வானொலி தமிழ் பிரிவின் கடித எண்ணிக்கையும், வினா – விடைப் போட்டிகளின்
விடைத்தாள் எண்ணிக்கையும் அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டேன்.

தமிழ் பிவுத் தலைவர் அவர்களுடன் எனது மனைவி,
மகள் மற்றும் நான்

16.05.1999
ல் திமிரியில் நடைபெற்ற அகில இந்திய சீன வானொலி நேயர் மன்ற 12 வது கருத்தரங்கில்


அருமை நண்பர் எஸ். சுந்தரன் அவர்களுடன்
புதிய கிருஷ்ணகிரி மாவட்ட மன்றம் துவக்கம்
:
தருமபுரி மாவட்டம்
இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிதாக கிருஷ்ணகிரி மாவட்டம் துவக்கப்பட்டதை ஒட்டி கிருஷ்ணகிரி
மாவட்டத்திற்கென புதிய மாவட்ட மன்றம் துவக்கப்பட வேண்டுமென்ற அவாவின் அடிப்படையில்
எனது இல்லத்தில் அதற்கான துவக்க விழா நிகழ்வு நடைபெற்றது அப்போது விழா நிகழ்வு முடிந்த
பின்னர் தமிழ் பிரிவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அன்றே வானொலியில் அறிவிப்பும் எனது
குரலிலேயே செய்யப்பட்டது.

புதிய கிருஷ்ணகிரி மாவட்ட மன்றத் துவக்க விழா செய்தியை
பதிவு செய்தல்
அவ்விழாவில்
அகில இந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் திரு எஸ்.செல்வம், பாண்டிச்சேரி பாலகுமார்,
கோவை இராதாகிருஷ்ணன், அ.பள்ளிப்பட்டி சீ. பாரதி ஆகியோரும் கலந்துக்கொண்டனர். அந்நிகழ்வின்
போது ஊத்தங்கரையில் அகில இந்திய சீன வானொலியின் 4 வது கருத்தரங்கை நடத்தியமைக்கான நினைவுப்
பரிசு திரு எஸ். செல்வம் அவர்களால் எனக்கு வழங்கப்பட்டது.

நினைவு பரிசு பெறல்

சேந்தமங்கலத்தில்
நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ் பிரிவின் முன்னால் சிறப்பு நிபுணர் திரு இராஜாராம் அவர்களிடமிருந்து
பாராட்டுச் சான்றிதழ் பெறல், உடன் முன்னால் சிறப்பு நிபுணர் கிளீட்டஸ் அவர்கள்.

சேந்தமங்கலம்
கருத்தரங்கு முடிந்து மீள ஊர் திரும்பும் போது வழியில் எடுத்துகொண்ட நிழற்படம் என்.
பாலகுமார், நான், கிளீட்டஸ், இராஜகோபால், எஸ். செல்வம், கலைவாணன் இராதிகா ஆகியோர்
திருச்சியில் நடைபெற்ற 24 வது அகில
இந்திய கருத்தரங்கில்

பாண்டிச்சேரி கருத்த்ரங்கில்

ஜெயங்கொண்டம் கருத்தரங்கில்

விழுப்புரம்
கருத்தர்ங்கில்

தமிழ் பிரிவிற்காக உவமைக் கவிஞர் சுரதா அவர்களிடம்
பேட்டி கண்டபோது
நான் இங்கு குறிப்பிட்ட
செய்திகளும், நிகழ்வுகளும் மிகச் சிலவே இன்னும் ஏராளமானவை நிழற்படங்களாகவும், மனப்
படங்களாகவும், என்றும் நினைவில் வாழும் எண்ண அலைகளாகவும் உள்ளன.
தமிழ் பிரிவோடு
நான் கொண்டிருக்கும் தொடர்பு என்பது மிகச் சாதாரமானது அல்ல. வானொலி நிகழ்ச்சிகளைப்
பற்றியும் , பெறப்படும் பரிசுப் பொருட்களைப் பற்றியுமான தொடர்பு மட்டுமல்ல. தமிழ் பிரிவில்
பணியாற்ற்றிய முன்னாள், இந்நாள் தலைவர்கள், பணியாளர்கள், சிறப்பு நிபுணர்கள் முதல்
நேயர்கள் வரையில் ஆழ்ந்த நட்புறவு குடும்ப பாச உணர்வோடு இன்றும் தொடரும் பந்தம், இது
எனக்கு என்றும் சொந்தம். முன்னாள் தமிழ் பிரிவுத் தலைவர் திரு எஸ். சுந்தரன் அவர்கள்
அவ்வப்போது எனக்கு எழுதிய பல பக்கம் கொண்ட கடிதங்கள் எனது கடிதக் கோப்பில் உறங்குகின்றன,
அவற்றில் அவர் பரிமாறிக்கொண்ட கருத்துக்கள் எனது நினைவலைகளில் இன்றும் உலவிக்கொண்டுள்ளன.
திருமதி தி. கலையரசி அவர்கள் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் சிறப்பு மொழிப் பயிற்சிக்காக
வந்தபோது எனக்கு எழுதிய பல மடல்களும், தமிழ் பிரிவின் தலைவராக அவர் எழுதிய பல மடல்களையும்
இன்னும் போற்றி பாதுகாத்து வருகிறேன்.
இன்றைய தமிழ் பிரிவுத்
தலைவர் திருமதி கலைமகள் அவர்கள் எனக்கு கடிதங்கள் மூலம் விரிவான தொடர்பு கொள்ளாவிட்டாலும்
கூட தொலைபேசி மூலம் அவ்வப்போது தொடர்புகொண்டு கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வது எனக்கு
மகிழ்வை அளிக்கிறது.
நேயர்களைப் பொருத்தவரையில்
அனைவரும் இன்று எனது குடும்ப உறவுகள், அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்கும் வாய்ப்பை
எனக்கு வழங்குபவர்கள். சீன வானொலி தமிழ் பிரிவின் நேயர் மன்றம் மூலம் எனக்கு அறிமுகமான
நண்பர்கள் பலர் , அவர்களில் ஒய். எஸ். சைனா பாலு, பல்லவி.கே பரமசிவன், கோவை ராம்நகர்
ஆர். சின்னராஜ், திருச்சி வி.டி. இரவிச்சந்திரன், வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம்,
இராமபத்திரன், கடலூர் துறைமுகம் கதிர்காமநாதன், அக்கமனாள்ளி டி. சுந்தரம், பாண்டிச்சேரி
என். பாலகுமார், ஜி. இராஜகோபால், எஸ்.வி. குரு, பேளுக்குறிச்சி கே. செந்தில்வேலு, சேந்தமங்கலம்
எஸ்.எம். இரவிச்சந்திரன், சேலம் ஆர். செந்தாமரை, வி. இளங்கோவன், பாண்டமங்கலம் பி.ஆர்.கார்த்திகேயன்,
எம். தியாகராஜன், சீனமுத்தூர் எஸ்.எம். குமாரசாமி,
தண்டாம்பாளையம் சீனிவாசன், விழுப்புரம் எஸ். பாண்டியராஜன், இராசிபுரம் பி. இராஜேந்திரன்,
எஸ்.ஆர். ஜானகிராமன் என இன்னும், இன்னும்எத்தனையோ நண்பர்கள் அவர்களில் பலரின் தொடர்பு
இன்று என்னுடன் இல்லை என்றாலும் கூட அவர்களின் நினைவு அவ்வப்போது வந்து நிழலாடிக்கொண்டே
உள்ளது எனப்து மட்டும் உண்மை.
இவ்வளவு நிகழ்வுகளை
மலரும் நினைவுகளாய் என்னுள் இன்று அசை போட காரணமாய் அமைந்தது சீன வானொலியின் தமிழ்
பிரிவே என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன், (நே.அ.எண்: 053012) தலைவர்,
கவி.செங்குட்டுவன், (நே.அ.எண்: 053012) தலைவர்,
கிருஷ்ணகிரி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம்,
ஊத்தங்கரை - 635207. அலைபேசி: 9842712109 / 9965634541 தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in / kavi.senguttuvan@gmail.com
வலைப்பூ : http://kalvikoyil.blogspot.com
ஊத்தங்கரை - 635207. அலைபேசி: 9842712109 / 9965634541 தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in / kavi.senguttuvan@gmail.com
வலைப்பூ : http://kalvikoyil.blogspot.com