Monday, June 15, 2026

அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபா பிறந்த நாள் விழா...

ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 15.06.2026 அறிவியல் தமிழின் முன்னோடி, அறிவியல் தமிழின் தந்தை ஐயா மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடந்த நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், பூ. இராம்குமார், ரா. ஜீவா, கணினிப் பயிற்றுநர் ச. மரகதம் ஆகியோரும் மாணவர்களும் கலந்துக் கொண்டனர். தலைமை ஆசிரியர் தமது உரையில் மணவை முஸ்தபா அவர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழில் அறிவியல் கருத்துக்களை வெளிப்படுத்திய அவரின் திறன், அவர் தமிழில் உருவாக்கித் தந்த முதல் சிறுவர் கலைக்களஞ்சியம், மற்றும் அவரின் தமிழ்ப்பணி, அவர் எழுதிய நூல்கள், தமிழ் நாடு அரசு மற்றும் பிற துறைகள் அவர்க்கு வழங்கிய விருதுகள், ஆகியவை பற்றியும், அவரின் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார்.

Sunday, April 19, 2026

காவலூர் வைனு பாப்பு வானாய்வகத்தை பார்வையிட்ட ஜோதிநகர் பள்ளி மாணவர்கள்...

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஜவ்வாது மலை, காவலூரில் அமைந்துள்ள வைனு பாப்பு வானாய்வகத்தைப் பார்வையிட்டனர். ஆசியாவில் அமைந்துள்ள 3வது முக்கிய வானாய்வகம் இது. 1986 முதல் செயல்பட்டுவரும் இந்த வானியல் ஆய்வகத்தில் 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி உள்ளது. இதன்மூலம் வானியலில் நிகழும் அன்றாட மாற்றங்களை பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் பல்வேறு செயல்பாடுகளையும், ஆய்வுகளின் முக்கியத்துவத்தையும் அறிவியலாளர் திருமதி மது மிகச் சிறப்பாக எமது மாணவர்களுக்கு விளக்கினார், தொடர்ந்து தொலைநோக்கி மூலம் வானில் காணும் வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கோள்களையும், வியாழன் கோளைச் சுற்றி வரும் வளையம் மற்றும் 94 நிலவுகளில் 4 நிலவுகளையும் தெளிவாக பார்வையிட சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களுக்கு காட்டினர். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் கல்விச் சுற்றுலாவாகச் சென்ற மாணவர்கள் முன்னதாக திருப்பத்தூரில் அமைந்துள்ள 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ பிரம்மேஸ்வரர் கோயில், ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றையும், முக்கிய சுற்றுலாத் தளமான சிறுவர்களைக் கவரும் ஜலகாம்பாறை வனத்துறையின் சுற்றுச் சூழல் பூங்கா, முருகன் கோயில் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். ஆன்மீகம் மற்றும் அறிவியல், சுற்றுச் சூழல் இடங்களைப் பார்வையிட்டு பரவசமடைந்த மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், கனிணிப் பயிற்றுநர் ச. மரகதம் ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.

google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0 google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0