Tuesday, December 27, 2011

அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 23-வது கருத்தரங்கு

அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 23-வது கருத்தரங்கு, திட்டமிட்டபடி, டிசம்பர் திங்கள் 18 ஆம் நாள், பாண்டிச்சேரி ஸ்ரீசாய்ராம் விடுதி கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இவ்விழாவில், சீன வானொலி தமிழ்ப்பிரிவின் முன்னாள் சிறப்பு நிபுணர் ந.கடிகாசலம், சீன வானொலி அறிவிப்பாளர்களும், தற்போது பாண்டிச்சேரியில் தங்கி தமிழ்மொழி கற்பவர்களுமான தேன்மொழி, மோகன் மற்றும் ஜெயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கிற்கு, மன்ற செயலாளர் பல்லவி திரு. கே.பரமசிவன் முன்னிலை வகிக்க, மன்றத் தலைவர் திரு.எஸ்.செல்வம் தலைமை வகித்தார். பாண்டிச்சேரி மாநில சீன வானொலி நேயர் மன்ற செயலாளர் திரு. ஜி.இராஜகோபால் வரவேற்புரை நிகழ்த்தியதுடன், ஆண்டுக்கருத்தரங்கு இனிதே துவங்கியது. வரவேற்புரைக்குப் பின், திரு.எஸ்.செல்வம் தலைமை உரையை வழங்கினார். அதில், கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31 ஆம் நாளிரவு, பெய்ஜிங்கில் முனைவர் ந.கடிகாசலம் அவர்களை முதன்முதலாக சந்தித்தது பற்றி நினைவுகூர்ந்து, தமிழ்ப்பிரிவின் மூன்று பணியாளர்களான தேன்மொழி, மோகன் மற்றும் ஜெயா ஆகியோர், பாண்டிச்சேரியில் தமிழ்மொழி கற்க வந்ததன் நோக்கம் பற்றியும் எடுத்துக் கூறினார். அன்றி, சீன வானொலியின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட முனைவர் ந.கடிகாசலம் மற்றும் கலைவாணன் இராதிகா ஆகியோரின் சீனப் பயண அனுபவங்களின் மீதான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, பல்லவி திரு.கே.பரமசிவன் உரையாற்றினார். 1986 ஆம் ஆண்டில், அவரும், காலஞ்சென்ற ஒய்.எஸ்.பாலு அவர்களும் இணைந்து மேற்கொண்ட முதலாவது சீனப் பயணம் பற்றியும், பயணத்தைத் தொடர்ந்து, தமிழ்ப்பிரிவின் அப்போதைய தலைவர் திரு.எஸ்.சுந்தரன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றம் துவக்கியது பற்றியும் சுவைபட விளக்கிக் கூறினார்.
பின்னர், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த முனைவர் ந.கடிகாசலம் அவர்களின் உரை துவங்கியது. நகைச்சுவையுடன் அதே வேளையில் கருத்துச் செறிவுடன் பல்வேறு தகவல்களை நேயர்களிடையே அவர் பகிர்ந்து கொண்டார். 1983 ஆம் ஆண்டு, சீன வானொலி தமிழ்ப்பிரிவில் பணியில் சேர்ந்து, நிகழ்ச்சிக் கட்டமைப்பில் மேற்கொண்ட சீர்திருத்தம் முதல், அண்மையில் அவர் மேற்கொண்ட சீனப் பயணம் வரை, பல்வேறு செய்திகளை அவர் நன்றாக எடுத்துக் கூறினார். மூன்று கட்டங்களாக, மொத்தம் 12 ஆண்டுகள் சீன வானொலியில் ஆற்றிய பணியின்போது, சீனாவின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை கண்கூடாகக் கண்டவர் அவர். எனவே, அவரின் அனுபவ உரை, நேயர்களை கட்டிப்போட்டது.
அடுத்து, சீன வானொலியின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, உலகின் பத்து சிறந்த நேயர்கள் மன்றங்களுள் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் பிரதிநிதியாக, சீனாவில் இத்திங்களின் துவக்கத்தில் பயணம் மேற்கொண்ட திரு.சு.கலைவாணன் இராதிகா அவர்கள், உணர்வுபூர்வமாக தம் சீனப் பயண அனுபவத்தை எடுத்துக் கூறினார். மக்கள்மாமண்டபத்தில் நடைபெற்ற விழா பற்றி எடுத்துரைத்த அவர், முதன் முதலாக மேற்கொண்ட விமானப் பயணம், பல்வேறு சீன உணவு வகைகள் பற்றி எடுத்துக் கூறியதுன், சீனாவின் பூசியன் மாநிலத்தில் மேற்கொண்ட பயண அனுபவங்கள் பற்றியும் நாள்வாரியாக விளக்கினார். அன்றி, தாம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி பற்றியும் நேயர்களிடம் அவர் தெரிவித்தார். உரையின் நடுவே, விழாவில் தாம்பெற்ற அழகிய கோப்பை மற்றும் சான்று ஆகியவற்றையும் அவர் காட்டினார். நேயர்கள் அனைவரும், அழகான கோப்பையை கண்டு களித்தனர்.
கலைவாணனின் உரைக்குப் பின், தமிழ்ப்பிரிவுத் தலைவர் கலைமகள் அவர்களின் வாழ்த்துரையை, அறிவிப்பாளர் தேன்மொழி வாசித்தார். வாழ்த்துரையில், முனைவர் ந.கடிகாசலம் மற்றும் சு.கலைவாணன் இராதிகா ஆகியோரின் சீனப் பயண அனுபவங்களின் மீதான எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அவ்வெதிர்பார்ப்பை நிறைவேற்றியதற்காக தேன்மொழி அவர்கள் நன்றி தெரிவித்தார்.
பகல் 1 மணி முதல் 2 மணி வரை விருந்தினர்கள் மற்றும் நேயர்கள் மதிய உணவு முடித்துக் கொண்டபின், சீன வானொலிப் பணியாளர்கள், புகழ்பெற்ற தமிழ் வார இதழான •ஆனந்த விகடன்• என்னும் இதழுக்கு நேர்காணல் அளித்தனர்.
உணவு இடைவேளை முடிந்தபின்னர், சீன வானொலியால் வழங்கப்பட்ட அன்பளிப்புப் பொருட்களை உள்ளடக்கிய கண்காட்சியை நேயர்கள் பார்வையிட்டனர். கடந்த ஆண்டுகளில், திரு. எஸ்.செல்வம் அவர்களுக்கு சீன வானொலியால் வழங்கப்பட்ட பல்வேறு அன்பளிப்புப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை நேயர்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்.
பின், பிற்பகல் நிகழ்ச்சிகள் துவங்கின. சிறப்பு விருந்தினர்களுக்கு புகழ்பெற்ற நூல்கள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள், தலைமை மன்ற மற்றும் கருத்தரங்கை பொறுப்பேற்று நடத்திய மன்றங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு சு.கலைவாணன் இராதிகா சால்வை அணிவித்தார்தொடர்ந்து, நேயர்களுக்கு தம் கருத்துக்களை நேர்மையான முறையில் தெரிவிக்க முழுவாய்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு நேயர்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்தி தம் கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக, விழுப்புரம் ஜமீல் அகமது, திருநீலக்குடி மா.உலகநாதன், ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன், திருச்சி வி.டி.இரவிச்சந்திரன் போன்ற நேயர்களின் கருத்துக்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டன. தமது உரையினூடே, தாம் எழுதிக் கொண்டு வரும், நீளக் கடிதத்தின் ஒரு பகுதியான 8 மீட்டர் கடிதத்தை வி.டி.இரவிச்சந்திரன் நேயர்களிடையே காண்பித்தார்.
இறுதியாக, திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன் நன்றியுரை நிகழ்த்த, அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 23வது கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், எவ்வித எதிர்பார்ப்புமின்றி கலந்து கொண்ட நேயர்களுக்கும், கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்திய எஸ்.செல்வம், என். பாலக்குமார், எஸ்.பாண்டியராஜன், ஜி.ராஜகோபால், வி.டி.இரவிச்சந்திரன் மற்றும் தலைமை மன்றப் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.

Saturday, December 17, 2011

அழைப்பிதழ்


சீன வானொலித் தமிழ் பிரிவின் நேயர்கள் நடத்தும் 23 வது அகில இந்த்திய கருத்தரங்கு அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் வாய்ப்பும் உள்ளவர்கள் அவசியம் பங்கு பெறவும்.
அன்புடன்.......
கவி.செங்குட்டுவன்,தலைவர்,
கிருஷ்ணகிரி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம்.
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109