Wednesday, June 10, 2020

இணையவழிக் கல்வி யாருக்கு.... எப்படி.... எப்பொழுது அளிக்கலாம்........

நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தனியார் பள்ளிகள் தம்மைத் தக்க வைத்துக் கொள்ளவும், மாணவர்களிடம் கட்டணம் பெற்றிட வேண்டியும் இணைய வழிக் கல்வி என்ற பெயரில் திரைப்படம் காட்டுவது போல கானொளிக் காட்சி வகுப்புகளை யூ டியூப் மூலமும் வேறு சில செயலிகள் மூலமும் அளித்து வருகிறார்கள்.......

இதுபோல அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொது வெளியில் அதிகமாகவே பகிரப்பட்டும் வருகிறது.....

எந்த ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரும் தமது மாணவர்களின் நலனுக்காக உழைப்பதில் சலிப்பு காட்டுபவர்களாக இருக்க வாய்ப்பே இல்லை....

எத்தகைய பேரிடர் காலங்களிலும் தமது மாணவர்களை தத்தம் குழந்தைகளாகவே பாவித்து கற்பித்தலை நிகழ்த்தக் கூடியவர்கள்....

குறிப்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சிறார்களை தமது மடியில் அமர்த்திக் கொண்டு எழுத்துக்களையும், எண்களையும் கற்பிக்கும் ஆசிரியர்களும், தான் கொண்டு செல்லும் காலை உணைவைக் கூட அந்த மழலைகளோடு பகிர்ந்து உண்டுக்கொண்டு கற்பித்தலை நிகழ்த்தும் ஆசிரியர்கள் ஏராளம் உண்டு இங்கே....

அன்றாட வகுப்பறைச் செயல்பாடுகளுக்காக மாணவர்களுக்குத் தேவைப்படும் எழுது பொருட்கள், குறிப்பேடுகள் வண்ணக் காகிதங்கள், வகுப்பறைத் தேர்விற்கான காகிதங்கள் என பலவற்றையும் தமது சொந்தச் செலவில் செய்து வருவோர் ஏராளம்.....

இப்படி பலவற்றையும் யாரையும் எதிர்பார்க்காமல் செய்யும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இணைய வழிக் கற்பித்தலை மேற்கொள்ள தயக்கம் காட்டுவது ஏன்....

பல தனியார் பள்ளிகளும் இன்றுதான் இணைய வழிக் கல்வியை நிகழ்த்தி வருகிறது அதுவும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை பதிவேற்றி.....

ஆனால் அன்றாட வகுப்பறை நிகழ்வுகளாக நேரலையுடன் கூடிய இணைய வகுப்புகளை கடந்த பல ஆண்டுகளாக நான் நடத்தி வருகிறேன். இதில் பங்கு பெறும் குழந்தைகள் கற்பிக்கும் ஆசிரியர்/தன்னார்வலரோடு உடனுக்குடன் நேரிடையாக தமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம் ... கற்பிக்கும் ஆசிரியர் நேரடியாக உடனுக்குடன் மதிப்பீடு செய்யவும் முடியும்.

இது போல நான் மட்டுமல்ல இன்னும் ஏராளமான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.....

ஆனால்........ இன்று..... கொரோனா என்னும் தீதொற்று உலகையே அச்சுருத்திக் கொண்டு இருக்கும் வேளையில்...... செய்ய முடிந்தும் செய்ய இயலாமல்.... மனம் வருந்தியும் செயல்பட இயலாமல்....... ஆர்வம் துரத்தியும் அரங்கேற்ற இயலாமல்.... அய்யகோ என்செய்வேன் எனது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை எண்ணி....


எனது பள்ளியில் பயிலும் 53 மாணவர்களில் 41 மாணவர்களுக்கு மட்டும் அலைபேசி எண் உள்ளது.

அதில் வாட்சப் இணைப்பு உள்ள எண்கள் 14 மட்டும், அதிலும் தற்போது ஓர் செய்தியை அனுப்பி வைத்தால் அதைப் பார்ப்பதற்கனான இணைய வசதி 9 மாணவர்களுக்கு மட்டும் உள்ளது.

தற்போதைய சூழலில் நான் எனது மாணவர்களுக்கு இணைய வழியில் எவ்வாறு எனது கற்பித்தலைச் சேர்ப்பது அல்லது எனது மாணவர்கள் எப்படி இணைய வழியில் கற்பது.....

இது என்னைப்போன்ற அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - மாணவர்களுக்கான நடைமுறைச் சிக்கல்.....

இதை யார் தீர்ப்பது, எப்படி தீர்ப்பது.....

எனது பள்ளிமாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த வருத்தத்தோடும், ஆற்றாமையோடும் காலம் கழித்து வருகிறார்கள்.....

செ. இராஜேந்திரன், தலைமை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
ஜோதிநகர், ஊத்தங்கரை. கிருஷ்ணகிரி மாவட்டம்
மாவட்டச் செயலாளர், தமிழக ஆசிரியர் கூட்டணி, மத்தூர் கல்வி மாவட்டம்.