Wednesday, June 26, 2024

ஊத்தங்கரையில் புத்தகக் கண்காட்சி.....

புத்தகக் கண்காட்சி துவக்கவிழா...... ஊத்தங்கரை செங்குந்தர் திருமண மண்டபத்தில் இன்று (25.06.2024) ல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவன புத்தகக் கண்காட்சி துவங்கியது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கவிழா இன்று ஊத்தங்கரை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஊத்தங்கரை தமிழ்ச்சங்க துணைச் செயலாளரும் மூத்த கவிஞருமான இ. சாகுல் அமீது அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக மண்டல மேலாளர் அரிமா நூருல்லா செரீப் அவர்கள் கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் திரு எஸ். முரளிதரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் கவி. செங்குட்டுவன், லோகநாதன் சேகர், சித. வீரமணி, பழ. வெங்கடாசலம், நா. இராமமூர்த்தி, அவ்வை சுரேஷ், எழுஞாயிறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வே. கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணவேணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் கிளை மேலாளர் இரா. தியாகராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார். கண்காட்சியில் ஊத்தங்கரை கவி. செங்குட்டுவனின் நூல்கள் உள்ளிட்ட கவிதை, கட்டுரை, சுய முன்னேற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சிறுவர் நூல்கள், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான நூல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக நகரும் ஊர்திகள் மூலமாக மட்டுமே விற்பனை செய்துவந்த இந்த நிறுவனம் தற்போது அரங்கில் காட்சிப்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குறியது.

Saturday, June 25, 2022

ஆசிரியர்களுக்காக பயிற்சியா..... பயிற்சிக்காக ஆசிரியர்களா....

        

கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி அளிப்பது என்பது புதிது அல்ல.   

இது எல்லா காலக் கட்டங்களிலும் நடைமுறையில் இருந்த ஒன்றுதான், ஆனால் அன்றைய பயிற்சிக்கும் இன்றைய பயிற்சிக்கும் உள்ள வேறுபாடுதான் மிகப்பெரியது.

ஆம், அன்று அளிக்கப்பட்ட பயிற்சி ஆசிரியர்களுக்கானது. இன்றோ பயிற்சிக்காத்தான் ஆசிரியர்கள்.

ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தி, மாணவர்களின் கற்றல் மேம்படச் செய்ய வேண்டும் என உரிய பாட ஆசிரியகளுக்கு உரிய பயிற்சிகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டது.

இன்றோ வழங்கப்படும் பயிற்சியில், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் பயிற்சி என்பது உரிய பாட ஆசிரியகளுக்கு வழங்கிட வேண்டும் என்பதை விடுத்து பாடம்/வகுப்பு  சம்பந்தமே இல்லாத எவறாவது கலந்துக்கொண்டு பயிற்சியாளர் எண்ணிக்கை நிறைவு செய்தால் போதுமானது என்ற நிலைக்கு வந்தாயிற்று. 

இப்படி வழங்கப்படும் பயிற்சிகள் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது கல்வித் துறைக்கே வெளிச்சம்.

தற்போது வழங்கப்படும் எல்லாப் பயிற்சிகளிலும் முதன்மை செயல்பாடாக இருப்பது பயிற்சியாளர்கள் எண்ணிக்கை நிறைவு செய்வது மட்டுமே.

இதன் விளைவு தேவை இல்லாத பயிற்சிகள் தேவை இல்லாதவர்களுக்கு போய் சேர்வது மட்டுமல்லாமல், அவர்களின் வகுப்பு மாணவர்களுக்கும் கற்றல் கால இழப்பு ஏற்படுகிறது....

உரியவர்கள் உரிய முறையில் சிந்தித்து, உரியவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கிட முன்வர வேண்டும்....

Wednesday, June 10, 2020

இணையவழிக் கல்வி யாருக்கு.... எப்படி.... எப்பொழுது அளிக்கலாம்........

நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தனியார் பள்ளிகள் தம்மைத் தக்க வைத்துக் கொள்ளவும், மாணவர்களிடம் கட்டணம் பெற்றிட வேண்டியும் இணைய வழிக் கல்வி என்ற பெயரில் திரைப்படம் காட்டுவது போல கானொளிக் காட்சி வகுப்புகளை யூ டியூப் மூலமும் வேறு சில செயலிகள் மூலமும் அளித்து வருகிறார்கள்.......

இதுபோல அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொது வெளியில் அதிகமாகவே பகிரப்பட்டும் வருகிறது.....

எந்த ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரும் தமது மாணவர்களின் நலனுக்காக உழைப்பதில் சலிப்பு காட்டுபவர்களாக இருக்க வாய்ப்பே இல்லை....

எத்தகைய பேரிடர் காலங்களிலும் தமது மாணவர்களை தத்தம் குழந்தைகளாகவே பாவித்து கற்பித்தலை நிகழ்த்தக் கூடியவர்கள்....

குறிப்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சிறார்களை தமது மடியில் அமர்த்திக் கொண்டு எழுத்துக்களையும், எண்களையும் கற்பிக்கும் ஆசிரியர்களும், தான் கொண்டு செல்லும் காலை உணைவைக் கூட அந்த மழலைகளோடு பகிர்ந்து உண்டுக்கொண்டு கற்பித்தலை நிகழ்த்தும் ஆசிரியர்கள் ஏராளம் உண்டு இங்கே....

அன்றாட வகுப்பறைச் செயல்பாடுகளுக்காக மாணவர்களுக்குத் தேவைப்படும் எழுது பொருட்கள், குறிப்பேடுகள் வண்ணக் காகிதங்கள், வகுப்பறைத் தேர்விற்கான காகிதங்கள் என பலவற்றையும் தமது சொந்தச் செலவில் செய்து வருவோர் ஏராளம்.....

இப்படி பலவற்றையும் யாரையும் எதிர்பார்க்காமல் செய்யும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இணைய வழிக் கற்பித்தலை மேற்கொள்ள தயக்கம் காட்டுவது ஏன்....

பல தனியார் பள்ளிகளும் இன்றுதான் இணைய வழிக் கல்வியை நிகழ்த்தி வருகிறது அதுவும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை பதிவேற்றி.....

ஆனால் அன்றாட வகுப்பறை நிகழ்வுகளாக நேரலையுடன் கூடிய இணைய வகுப்புகளை கடந்த பல ஆண்டுகளாக நான் நடத்தி வருகிறேன். இதில் பங்கு பெறும் குழந்தைகள் கற்பிக்கும் ஆசிரியர்/தன்னார்வலரோடு உடனுக்குடன் நேரிடையாக தமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம் ... கற்பிக்கும் ஆசிரியர் நேரடியாக உடனுக்குடன் மதிப்பீடு செய்யவும் முடியும்.

இது போல நான் மட்டுமல்ல இன்னும் ஏராளமான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.....

ஆனால்........ இன்று..... கொரோனா என்னும் தீதொற்று உலகையே அச்சுருத்திக் கொண்டு இருக்கும் வேளையில்...... செய்ய முடிந்தும் செய்ய இயலாமல்.... மனம் வருந்தியும் செயல்பட இயலாமல்....... ஆர்வம் துரத்தியும் அரங்கேற்ற இயலாமல்.... அய்யகோ என்செய்வேன் எனது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை எண்ணி....


எனது பள்ளியில் பயிலும் 53 மாணவர்களில் 41 மாணவர்களுக்கு மட்டும் அலைபேசி எண் உள்ளது.

அதில் வாட்சப் இணைப்பு உள்ள எண்கள் 14 மட்டும், அதிலும் தற்போது ஓர் செய்தியை அனுப்பி வைத்தால் அதைப் பார்ப்பதற்கனான இணைய வசதி 9 மாணவர்களுக்கு மட்டும் உள்ளது.

தற்போதைய சூழலில் நான் எனது மாணவர்களுக்கு இணைய வழியில் எவ்வாறு எனது கற்பித்தலைச் சேர்ப்பது அல்லது எனது மாணவர்கள் எப்படி இணைய வழியில் கற்பது.....

இது என்னைப்போன்ற அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - மாணவர்களுக்கான நடைமுறைச் சிக்கல்.....

இதை யார் தீர்ப்பது, எப்படி தீர்ப்பது.....

எனது பள்ளிமாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த வருத்தத்தோடும், ஆற்றாமையோடும் காலம் கழித்து வருகிறார்கள்.....

செ. இராஜேந்திரன், தலைமை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
ஜோதிநகர், ஊத்தங்கரை. கிருஷ்ணகிரி மாவட்டம்
மாவட்டச் செயலாளர், தமிழக ஆசிரியர் கூட்டணி, மத்தூர் கல்வி மாவட்டம்.

google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0 google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0